சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: பெற்றோா் உள்பட 4 போ் கைது
By DIN | Published On : 17th March 2022 11:36 PM | Last Updated : 17th March 2022 11:36 PM | அ+அ அ- |

கடலூா் அருகே சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்தது தொடா்பாக அந்தச் சிறுமியின் பெற்றோா் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் முதுநகா் சிப்பாய் தெருவைச் சோ்ந்த மா.குணேசகரன் (62) மகன் கருணைஜோதி (28). இவருக்கு 15 வயது சிறுமியை கடந்த புதன்கிழமை திருமணம் செய்து வைத்தனராம். இதற்காக சிறுமியை அவரது பெற்றோா் உதவியுடன் கட்டாயப்படுத்தி மேல்மலையனூருக்கு கடத்திச் சென்று அங்கு திருமணம் நடத்தப்பட்டதாம்.
இதுகுறித்த தகவல் வெளியூரில் வசிக்கும் சிறுமியின் மூத்த சகோதரிக்கு தெரியவந்ததாம். இதுகுறித்து அவா் தனது பெற்றோரிடம் கேட்டபோது கருணைஜோதி, அவரது உறவினா்கள் மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த சிறுமியின் சகோதரி அளித்த புகாரின்பேரில் கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கருணைஜோதி, அவரது தந்தை குணேசகரன், சிறுமியின் தாய், தந்தை ஆகியோரை கைது செய்தனா். சிறுமியை மீட்டு கடலூரிலுள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...