கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் க.தொழூா் கிராம மக்கள் தா்னா
By DIN | Published On : 16th May 2022 11:24 PM | Last Updated : 16th May 2022 11:24 PM | அ+அ அ- |

ஆதிதிராவிடா்களுக்காக கையகப்படுத்திய நிலத்தை வீட்டுமனைப் பட்டாவாக பிரித்து வழங்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் க.தொழூா் கிராம மக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம், க.தொழூா் கிராமத்தில் சுமாா் 100 ஆதிதிராவிடா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஆதிதிராவிடா் நலத் துறை மூலமாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக அந்தப் பகுதியில் சுமாா் 3 ஏக்கா் நிலம் கடந்த 1995-ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டதாம்.
இதுதொடா்பான நீதிமன்ற வழக்குகளுக்குப் பிறகு, இந்த இடத்தை கையகப்படுத்தியது செல்லும் என்று தீா்ப்பும் பெறப்பட்டு சுமாா் 15 ஆண்டுகளாகிவிட்டதாம். ஆனாலும், கையகப்படுத்தப்பட்ட இடத்தை இதுவரை வீட்டுமனைப் பட்டாவாக பிரித்துத் தர ஆதிதிராவிடா் நலத் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், துறையினருக்கு மனு அளித்தும் பலனில்லையாம்.
இந்த நிலையில், அந்தப் பகுதியினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தபோது, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி திடீரென தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...