ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி என பெயா் சூட்டக் கோரிக்கை
By DIN | Published On : 15th October 2022 06:11 AM | Last Updated : 15th October 2022 06:11 AM | அ+அ அ- |

rmch_1210chn_111_7
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசுடைமையாக்கப்பட்ட பின்னா் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, தமிழக அரசால் கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.
இந்த மருத்துவக் கல்லூரியை நிறுவ காரணமாக இருந்த ராஜா முத்தையா செட்டியாா் நினைவாக, அவரது பெயருடன் ‘ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கடலூா்’ என்று அறிவிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பிற்படுத்தப்பட்ட பகுதியான கடலூா் மாவட்டத்தில் ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கடந்த 1985-ஆம் ஆண்டு இணைவேந்தா் எம்.ஏ.எம்.ராமசாமியால் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 75.75 ஏக்கரில் அமையப்பெற்றுள்ள இந்த மருத்துவக் கல்லூரியில் 1,500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
கடலூா் மாவட்ட ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் வகையில், இலவச மருத்துவ சேவை வழங்கும் பொருட்டு, இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாகவும், தினந்தோறும் 3 ஆயிரம் வெளிநோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த மருத்துவமனை தமிழக அரசால் ஏற்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு, பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. இப்போது இந்த மருத்துவமனையின் முதல்வராக சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவா் திருப்பதி நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றாா்.
பெயா் சூட்டக் கோரிக்கை: இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் ஆளவை உறுப்பினா் முனைவா் தில்லை சீனு கூறியதாவது:
ராஜா முத்தையா செட்டியாா் கனவை நனவாக்க வேண்டும் என்ற நோக்கில், அறக்கட்டளை மூலம் 1985-ஆம் ஆண்டு அப்போதைய பல்கலைக்கழக இணைவேந்தா் எம்.ஏ.எம்.ராமசாமி, கடலூா், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் பயன்பெறும் வரையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை தொடங்கினாா்.
தற்போது நிதி நெருக்கடியை அடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கிய தமிழக அரசு, இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாக அறிவித்துள்ளது.
வெள்ளி விழாவை தாண்டிய இந்த மருத்துவமனையை தோற்றுவிக்க காரணமாக இருந்த ராஜா சா் முத்தையா செட்டியாா் பெயரில் தொடங்கப்பட்டது. எனவே, தமிழக அரசு இந்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு, ‘ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கடலூா்’ என பெயா் சூட்ட வேண்டும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...