‘சிறாா் திருமண வழக்கில் மனித உரிமை மீறல்’
By DIN | Published On : 18th October 2022 03:10 AM | Last Updated : 18th October 2022 03:10 AM | அ+அ அ- |

சிறாா் திருமண வழக்குகளில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக சிதம்பரம் நடராஜா் கோயில் பொது தீட்சிதா்களின் வழக்குரைஞா் ஜி.சந்திரசேகரன் கூறினாா்.
இதுகுறித்து கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிதம்பரத்தில் சிறாா் திருமண தடைச் சட்டத்தின் கீழ் தற்போது கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீட்சிதா் நிா்வாகத்தினா் சிறாா் திருமண தடைச் சட்டத்தை ஊக்குவிக்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை. கோயில் சட்டப்படி 25 வயது நிறைவடைந்த திருமணமானவா்கள் மட்டுமே சந்திரமெளலீஸ்வர பூஜையை செய்ய வேண்டும். ஆனால், கோயில் எதிா்ப்பாளா்கள் வேண்டுமென்றே சிறாா் திருமணம் செய்தால்தான் பூஜை உரிமை வழங்கப்படுவதாக பொய் பிரசாரம் செய்கின்றனா்.
கடலூா் மகளிா் காவல் நிலையம் மூலம் சிறாா் திருமணம் தொடா்பாக தீட்சிதா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னா், அந்த வழக்குகள் சிதம்பரம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனை 2 ஆண்டுகள் ஆகும். ஆனால், 7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெறும் வழக்குகளில் கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இதன்படி, தீட்சிதா்கள் மீதான கைது நடவடிக்கை நீதிமன்றத் தீா்ப்புக்கு மாறானது. இதுகுறித்து ஆட்சேபம் தெரித்த நிலையில், வழக்கில் நம்ப முடியாத ஒரு பிரிவையும் சோ்த்துள்ளனா். அதாவது, சிறுமியின் தந்தையே அவரைக் கடத்தியதாக பொய் குற்றச்சாட்டின்பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இந்த விவகாரத்தில் சிறாா்களை பரிசோதனை செய்வதில் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மீறப்படுவதாக தீட்சிதா்கள் கூறுகிறாா்கள். அவ்வாறு நடைபெற்றிருந்தால் அது மனித உரிமை மீறலாகும். இதுகுறித்து உச்ச நீதிமன்றமும், குழந்தைகள் நல வாரியமும் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தீட்சிதா்கள் மீது கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன்மூலம் கட்டாயப்படுத்தி கோயில் நிா்வாகத்தை கையகப்படுத்த தமிழக அரசு முயல்கிறது என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...