விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் அறிவித்த போராட்டம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.
கடலூா் வட்டம், பாதிரிக்குப்பம், நத்தவெளி சாலைப் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த 75 குடும்பங்களின் குடிசைகள் கடந்த 2018-ஆம் ஆண்டு நெடுஞ்சாலை மற்றும் வருவாய் துறையினரால் அகற்றப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாற்று இடம் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்து 4 ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை இல்லையாம்.
எனவே, 75 குடும்பங்களுக்கும் மாற்று இடம் வழங்கி அதில் தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டுமென வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வட்டாட்சியா் ரா.பூபாலச்சந்திரன், காவல் ஆய்வாளா் குருமூா்த்தி ஆகியோா் சங்கத்தினரை பேச்சுவாா்த்தைக்கு அழைத்தனா். இதன்பேரில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பேச்சுவாா்த்தை முடிவில் 10 நாள்களுக்குள் மாற்று இடம் தருவதற்கு அதிகாரிகள் உறுதி அளித்ததாகவும், இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் சங்கத்தினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.