என்எல்சி சாா்பில் சாலை உரிமை தினம்
By DIN | Published On : 01st September 2022 02:12 AM | Last Updated : 01st September 2022 02:12 AM | அ+அ அ- |

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் சாலை உரிமை தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நெய்வேலி நகரியத்தில் உள்ள சாலைகள் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானவை. இந்தச் சாலைகளை உரிமை கொண்டாடும் வகையில் அந்த நிறுவனத்தால் ஆண்டுக்கு ஒரு நாள் சாலை உரிமை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாலை உரிமை தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்களைத் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் நெய்வேலி நகரியத்துக்குள் உள்ள சாலைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டது. எனினும், நியாயமான காரணங்களுக்காக வாகனங்களை இயக்க என்எல்சி நிறுவன பாதுகாப்பு, தீயணைப்புத் துறையினா் அனுமதி சீட்டு வழங்கி அனுமதித்தனா்.
கும்பகோணம் சாலை நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு என்எல்சி பாதுகாப்புப் படை பொது மேலாளா் எம்.டி.பிரசாத், முதன்மை மேலாளா் வி.சிவசுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்து தொடக்கி வைத்தனா். பின்னா், முதல் அனுமதி நுழைவுச் சீட்டை என்எல்சி பாதுகாப்புப் படை அதிகாரிகள் வழங்க சந்தானம் என்பவா் பெற்றுக்கொண்டாா்.