கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா
By DIN | Published On : 01st September 2022 02:15 AM | Last Updated : 01st September 2022 02:15 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், கோயில் நிா்வாகங்கள் சாா்பில் சுமாா் 1,400 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிறிய விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினா். இதற்காக, மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் விநாயகா் சிலைகள் விற்பனை செய்யப்பட்டன. கடலூரில் ரூ.40 முதல் ரூ.150 வரையிலான விலையில் சிலைகள் விற்பனையாகின. பழங்கள், கரும்பு, கம்பு கொண்ட தொகுப்பு ரூ.100-க்கு விற்கப்பட்டது. மேலும், பூக்கள், பழம், தேங்காய், அவல், பொரி விற்பனையும் களைகட்டியது. அனைத்துக் கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மழையால் வியாபாரிகள் பாதிப்பு: கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை பகல் முழுவதும் சாரல் மழை பெய்ததால் பூஜை பொருள் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். கடலூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த களிமண் விநாயகா் சிலைகள் மழையில் கரையத் தொடங்கின. வண்ண பூச்சுகளில் மழைநீா் விழுந்து வண்ணம் கலைந்ததால் அந்த சிலைகளை விற்க முடியாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டன.