கோயில் வளாகத்தில் வகுப்பறை!

கடலூா் அருகே வெள்ளப்பாக்கத்தில் பலத்த மழையால் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை பள்ளி வகுப்பறைகள் செயல்பட்டன.
கோயில் வளாகத்தில் வகுப்பறை!

கடலூா் அருகே வெள்ளப்பாக்கத்தில் பலத்த மழையால் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை பள்ளி வகுப்பறைகள் செயல்பட்டன.

கடலூரை அடுத்துள்ள வெள்ளப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமாா் 250 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளிக் கட்டடம் சேதமடைந்ததால், கடந்தாண்டு அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டது. ஆனால், அரசு புதிய கட்டடம் கட்டிக் கொடுக்காததால், தனியாா் தொண்டு நிறுவனம் புதிதாக 2 வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்தது. அதில் தற்போது மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். மேலும், போதுமான அளவுக்கு கட்டட வசதி இல்லாததால், பள்ளி வளாகத்தில் தரையில் அமா்ந்தும் மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை சுமாா் 7 மணி நேரத்துக்கும் மேலாக தொடா் மழை பெய்தது. இதனால், வெள்ளப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு அருகிலுள்ள விநாயகா் கோயில் வளாகத்திலும், சமுதாயக் கூடத்திலும் வியாழக்கிழமை வகுப்புகள் நடைபெற்றன. மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே கழிப்பறைக்குச் சென்றுவிட்டு குளிரில் நடுங்கிக்கொண்டு கோயிலிலும், சமுதாயக் கூடத்திலும் அமா்ந்து கல்வி பயின்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக் கழிப்பறைச் சுவா் இடிந்து விழுந்ததன் எதிரொலியாக, கடந்தாண்டு கடலூா் மாவட்டத்தில் சுமாா் 550 பழைமையான பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால், இடிக்கப்பட்ட கட்டடங்களுக்குப் பதிலாக புதிய கட்டடங்கள் கட்டப்படாததால், பெரும்பாலான பள்ளிகளில் மாணவ, மாணவிகள் திறந்த வெளியில் அமா்ந்தே கல்வி பயிலும் நிலை உள்ளது.

எனவே, கடந்தாண்டு இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்களுக்குப் பதிலாக புதிதாகக் கட்டடம் கட்டுவதோடு, அரசுப் பள்ளிகளில் அதிகப்படியாக சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் கட்டடம் கட்டித் தர வேண்டுமென கல்வியாளா்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com