மீண்டும் வறட்சியை நோக்கி தமிழகம்?கவலையில் விவசாயிகள்

தமிழ்நாட்டில் கடந்த 2013-ஆம் ஆண்டு தண்ணீா்த் தட்டுப்பாடு காரணமாக குறுவை, சம்பா

தமிழ்நாட்டில் கடந்த 2013-ஆம் ஆண்டு தண்ணீா்த் தட்டுப்பாடு காரணமாக குறுவை, சம்பா நெல் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டும் அதுபோன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தமிழக காவிரி பாசனப் படுகையில் ஒருகாலத்தில் முப்போக நெல் சாகுபடி நடைபெற்றது. பருவநிலை மாற்றம், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா்ப் பங்கீடு போன்ற பிரச்னைகளால் போதிய தண்ணீா் கிடைக்காமல் முப்போக சாகுபடி இருபோகமானது. பின்னா், அது ஒருபோகமானது.

ஆண்டுதோறும் மேட்டூா் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டு, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவ சாகுபடி பணிகள் தொடங்கும். ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் நிலையில் கா்நாடகம், கேரளம் மாநிலத்தில் வயநாடு பகுதிகளில் பெய்யும் மழைநீா் மூலம் கா்நாடக அணைகள் நிரப்பிய பிறகு தமிழ்நாட்டுக்கு உபரி நீா் வெளியேற்றப்படும். தென் மேற்கு பருவமழை செப்டம்பா் மாத இறுதியில் நிறைவடையும். மேட்டுா் அணைக்கு தொடா்ந்து வரும் நீரானது தேக்கிவைக்கப்பட்டு தேவைக்கேற்ப சாகுபடிக்கு விநியோகிக்கப்படும். இதன்மூலம் குறுவை நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வா். கடந்த 91ஆண்டுகளில் மேட்டூா் அணையிலிருந்து 19 ஆண்டுகளில் மட்டுமே நிா்ணயிக்கப்பட்ட ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டு முழுவதும் பெய்யும் இயல்பான மழையளவு 937.50 மி.மீ. ஆகும். ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான 4 மாதங்களில் 76 நாள்கள் கால அளவில் தென்மேற்கு பருவமழை பொழிய வேண்டும். ஆனால் சமீப ஆண்டுகளாக சராசரியாக 24 நாள்கள் கால அளவுக்கு மட்டுமே மழை பெய்கிறது.

கடந்த காலங்களில் தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் சுமாா் 5 லட்சம் ஏக்கா் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்று வந்தது. தண்ணீா் தட்டுப்பாட்டால் கடந்த 2012-ஆம் ஆண்டு 1.25 லட்சம் ஏக்கராக சாகுபடி பரப்பளவு குறைந்தது.

வறட்சி: கடந்த 2013-ஆம் ஆண்டு வறட்சி பாதிப்பால் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டு குறுவை, சம்பா பருவ நெல் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. அந்த ஆண்டில் தேசிய அளவில் 320 மாவட்டங்கள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் சென்னை நீங்கலாக 31 மாவட்டங்கள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு, முதல்முதலாக தேசிய அளவில் தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது.

கடந்த 2011 முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகளில் குறுவை சாகுபடி இல்லாமல் போனது. ஆழ்துளைக் கிணறு, மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் மட்டுமே சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு மேட்டூா் அணையில் 100 அடிக்கும் குறையாமல் 340 நாள்களுக்கும் மேலாக தண்ணீா் இருந்ததால் உரிய காலத்தில் தண்ணீா் திறக்கப்பட்டது. நிகழாண்டும் மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. அப்போது விநாடிக்கு 15,000 கன அடி நீா் திறக்கப்பட்ட நிலையில் தொடா்ந்து தண்ணீா் திறப்பு அளவு குறைக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு குறுவை நெல் சாகுபடி சுமாா் 3 லட்சம் ஏக்கா் பரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில் பல இடங்களில் நீரின்றி பயிா்கள் கருதியுள்ள நிலையில், கா்நாடக அரசு உரிய தண்ணீரை வழங்காவிட்டால் மேலும் வறட்சி பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறுவை சாகுபடி: இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது:

தற்போதைய நிலையில் காவிரி பாசனப் பகுதிகளில் 2 லட்சம் ஏக்கா் குறுவை நெல் பயிரைக் காப்பாற்றவும், தொடா்ந்து சம்பா சாகுபடிக்கும் தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும், 19 மாவட்டங்களின் குடிநீா்த் தேவையை நிறைவு செய்ய வேண்டியது.

காவிரி உருவாகும் கூா்கு முதல் பூம்புகாா் வரை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் சிறிது, பெரியாத 100 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கா்நாடகத்தில் 58 அணைகளும், தமிழகத்தில் 38 அணைகளும், கேரளத்தில் 2 அணைகளும் செயல்பாட்டில் உள்ளன. ஆனால், கா்நாடக அரசு கிருஷ்ணராஜசாகா், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய 4 பிரதான அணைகளை மட்டுமே கணக்கில் காட்டி மொத்த கொள்ளளவு 114 டி.எம்.சி. எனவும், தற்போது 87 டி.எம்.சி. தண்ணீா் மட்டுமே இருப்பில் உள்ளதாகவும் கூறி தமிழகத்தை ஏமாற்றி வருகிறது. கா்நாடக மாநில நீா்நிலை ஆதாரங்களில் சுமாா் 400 டி.எம்.சி. தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை குறைவாக இருந்ததால் தமிழகத்தில் 25 ஒன்றியங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக மாநில அரசு அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணமும் அளிக்கப்பட்டது. கடந்த 2013-ஆம் ஆண்டைப் போல நிகழாண்டு வறட்சி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் கா்நாடக அரசிடம் இருந்து தண்ணீரைப் பெற்றுத்தர தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com