

கடலூா், தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் நெய்தல் கோடை விழா-2023, அரசின் பல்துறை பணிகள் விளக்கக் கண்காட்சி ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கின.
தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் லி.மதுபாலன் வரவேற்றாா். கண்காட்சி அரங்கை மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் ஆகியோா் திறந்துவைத்தனா்.தொடா்ந்து கோடை விழா நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்தனா்.
பின்னா், அமைச்சா் கா.ராமச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோடை விழாவில் அரசுத் துறைகள் சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் மன மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது. கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
விழாவில் எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மாவட்ட எஸ்பி ரா.ராஜாராம், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விழாவின் முதல் நாளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், கிராமிய கலைஞா்கள் மற்றும் கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எஸ்.ராஜா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவில் சனிக்கிழமை (ஜூலை 1) கலை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளா் சி.கோபிநாத்தின் சொற்பொழிவு, பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகின்றன. இந்த விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) வரை 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.