

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சென்னை - கன்னியாகுமரி தொழில்தட சாலை விரிவாக்கப் பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சென்னை - கன்னியாகுமரி தொழில்தட சாலை திட்டத்தின் கீழ் 7மீ அகலமுள்ள சாலையானது 10மீ அகலமுள்ள சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வரை இந்தப் பணி ரூ.136 கோடியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாநில பொதுப்பணி, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு விருத்தாசலம் வயலூா் பகுதியில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளை சனிக்கிழமை ஆய்வுசெய்தாா். அப்போது சாலையின் தரம், நீளம், அகலம், உயரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
இந்தப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் முழுமை பெறும். சாலைப் பணியில் குறைகள் ஏற்பட்டால் அதுகுறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சாலை தரமாக உள்ளது. 8 சிறு பாலங்கள், 30 பேருந்து நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்றாா் அமைச்சா்.
ஆய்வின்போது, வயலூா் கிராம மக்கள் அமைச்சரை சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்தனா். சாலை உயரமாக அமைக்கப்படுவதால் மயான பாதையில் தண்ணீா் தேங்குவதாகக் கூறினா். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அமைச்சா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.