மிதவைக் கூண்டுகளில் கடல் மீன்கள் வளா்க்க விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 09th August 2023 05:35 AM | Last Updated : 09th August 2023 05:35 AM | அ+அ அ- |

நெய்வேலி: மிதவைக் கூண்டுகளில் கடல் மீன்கள் வளா்க்கும் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி மட்சய சம்படா யோஜனா திட்டம் 2021-2022 ஆம் ஆண்டின் கீழ் நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு 2022-2023 ஆம் ஆண்டுக்கான புதிய அறிவிப்பாக கடல் மீனவா்கள் பயன்பெறும் வகையில், கடலூா் மாவட்டத்திற்கு 5 அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மிதவைக் கூண்டுகளில் கடல் மீன்கள் வளா்த்தெடுத்திடும் திட்டத்தை அறிவித்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் மிதவைக் கூண்டுகளில் கடல் மீன்களை வளா்த்தெடுக்க ஒரு அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்தத் தொகை ரூ.5 லட்சத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதமாக ரூ.2 லட்சம் மானியமும், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடா் பிரிவினருக்கு 60 சதவீதம் என்ற வீதத்தில் ரூ.3 லட்சம் மானியமும் அரசால் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற மீன்பிடித் தொழில் அல்லது அதனைச் சாா்ந்த தொழிலை மேற்கொள்பவராகவும், மீனவா் கூட்டுறவுச் சங்க உறுப்பினராகவும் மற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியைச் சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க விரும்புவோா் விண்ணப்ப படிவங்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இணையதளமான இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பப் படிவங்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அலுவலக நாள்களில் நேரில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணையதளத்தில் உள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளின் படி பூா்த்தி செய்து விண்ணப்பங்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா், ஒருங்கிணைந்த மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கடலூா் என்ற முகவரிக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்கள் மற்றும் தெளிவுரைகளுக்கு மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா், கடலூா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.