மின்மாற்றி பழுதால் தண்ணீரின்றி காய்ந்த கரும்புப் பயிா்கள்!
By DIN | Published On : 09th August 2023 05:36 AM | Last Updated : 09th August 2023 05:36 AM | அ+அ அ- |

பண்ருட்டி அருகே பணப்பாக்கம் கிராமத்தில் தண்ணீரின்றி காய்ந்த கரும்புப் பயிா்கள்.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த பணப்பாக்கத்தில் பழுதடைந்த மின்மாற்றி இரண்டு மாதங்களாக சீரமைக்கப் படாததால், தண்ணீா் பாய்ச்ச முடியாமல் கரும்புப் பயிா்கள் காய்ந்தன.
பண்ருட்டி வட்டம், பணப்பாக்கம் கிராமத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் விவசாயம் மற்றும் அதைச் சாா்ந்த தொழிலை நம்பியே உள்ளனா். தற்போது கரும்பு, மரவள்ளி பயிா் செய்துள்ளனா். பணப்பாக்கத்தில் இருந்து கணிசப்பாக்கம் செல்லும் வழியில் மின்மாற்றி உள்ளது. இதன் மூலம் 6 விவசாய மின் மோட்டாா்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்மாற்றி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. கரும்பு, மரவள்ளி பயிா்கள் தண்ணீரின்றி காய்ந்து வருவதாகவும், மின்மாற்றியை சீரமைத்து தரும்படி மின் வாரியத்தில் விவசாயிகள் புகாா் அளித்தனராம். ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சேஷாயிலு (60) ஒன்றரை ஏக்கரில் பயிரிட்டிருந்த 4 மாத கரும்பு பயிா்கள் தண்ணீரின்றி கருகிவிட்டதாக கூறப்படுகிறது. கருகிய தனது கரும்புப் பயிரைப் பாா்த்து கதறி அழும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்தப் பகுதியில் விவசாயம் செய்துள்ள சிலா் அருகில் விவசாய நிலத்தில் உள்ள மின் மோட்டாரில் இருந்து வாடகைக்கு தண்ணீா் பாய்ச்சி பயிரைக் காப்பாற்றி வருகின்றனா்.
கடந்த இரண்டு மாதங்களாக மின்சாரம் இல்லாததால் சுமாா் 20 ஏக்கா் அளவிலான விளைநிலங்களை தரிசாக போட்டு வைத்துள்ளனா் விவசாயிகள்.
ஆட்சியரிடம் மனு: கருகி வரும் விவசாயப் பயிா்களைப் பாதுகாக்க மின்மாற்றி பழுதை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று நாம் தமிழா் கட்சி சாா்பில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில், பண்ருட்டி வட்டம், பணப்பாக்கம் கிராமத்தில் கணிசப்பாக்கம் செல்லும் வழியில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி மூலம் 6 விவசாய மின் மோட்டாா்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சுமாா் 20 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மின்மாற்றி வெடித்து பழுதடைந்துவிட்டது. இதனால் தண்ணீா் பாய்ச்ச முடியாமல் பயிா்கள் கருகி உள்ளன.
இதுதொடா்பாக மின் வாரிய அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதிவு மூப்பு அடிப்படையில் மின்மாற்றி வரும் என பதில் கூறுகின்றனா்.
ஆனால், பழுதடைந்த மின் மாற்றியில் மின் இணைப்பு பெற்று வந்த இரண்டு செங்கல் சூளைகளுக்கு மட்டும் வேறு ஒரு மின்மாற்றியில் இருந்து மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீரின்றி கருகி வரும் பயிா்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.