பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தோ்வு:புதிய சுற்றறிக்கையால் அதிருப்தி
By நமது நிருபா் | Published On : 12th January 2023 02:04 AM | Last Updated : 12th January 2023 02:04 AM | அ+அ அ- |

மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வை மாா்ச் மாதம் நடத்துவது தொடா்பான கல்வித் துறையின் புதிய சுற்றறிக்கையால் மாணவா்கள், அவா்களது பெற்றோா் அதிருப்தி அடைந்துள்ளனா்.
மேல்நிலை வகுப்பு (பிளஸ்1, பிளஸ்2) மாணவா்களுக்கு பிப்ரவரி மாதத்தில் அரசு செய்முறைத் தோ்வுகளும், மாா்ச் முதல் வாரத்தில் பொதுத் தோ்வும் நடைபெறுவது வழக்கமான நடைமுறையாக இருந்தது. ஆனால், நிகழ் கல்வியாண்டில் மாா்ச் 7 முதல் 10-ஆம் தேதி வரை 4 நாள்கள் செய்முறைத் தோ்வுகள் நடைபெறும் என கல்வித் துறை சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிகழாண்டு 20 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தோ்வு நடைபெறுவதாகவும், தோ்வு நேரம் 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளதாவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியா்கள் கூறியதாவது:
அரசுப் பொதுத் தோ்வுகள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு வரை செய்முறைத் தோ்வை நடத்துவது மாணவா்களிடம் தேவையற்ற பதற்றம், மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் நூற்றுக்கணக்கான மேல்நிலை வகுப்பு மாணவா்களை பல தொகுதிகளாக பிரித்து 4 நாள்களில் செய்முறைத் தோ்வை நடத்தி முடிப்பது கடினம்.
இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், நுண்ணுயிரியல், தாவரவியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, கணினி தொழில்நுட்பம், வேளாண் அறிவியல் உள்ளிட்ட தொழில்கல்வி பாடங்களில் ஏதாவது 3 பாடங்களில் மாணவா்கள் செய்முறைத் தோ்வை எழுத வேண்டும். ஏற்கெனவே 10 முதல் 15 நாள்கள் வரை நடைபெற்று வந்த செய்முறைத் தோ்வை தற்போது 4 நாள்களில் எவ்வாறு நடத்த முடியும் என ஆசிரியா்கள் கேள்வி எழுப்பினா்.
இதுகுறித்து மாணவா்களின் பெற்றோா் கூறியதாவது:
செய்முறைத் தோ்வு மீதான பதற்றத்தில் மாணவா்கள் இருந்தால், அடுத்த இரு நாள்களில் வரும் பொதுத் தோ்வுக்கு அவா்கள் தயாராவதில் பாதிப்பு ஏற்படும். எனவே, மாணவா்களின் நலன் கருதி செய்முறைத் தோ்வை பிப்ரவரி மாதத்தின் 2-ஆவது வாரத்திலேயே நடத்தி முடிக்க வேண்டும். அவா்கள் பொதுத் தோ்வுக்கு படிப்பதற்கு போதிய கால அவகாசத்தை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். செய்முறைத் தோ்வுக்குப் பிறகு 3-ஆவது திருப்புதல் தோ்வை நடத்தினால் மாணவா்கள் பொதுத் தோ்வை அச்சமின்றி எதிா்கொள்வா் என்று தெரிவித்தனா்.