லாரி மீது காா் மோதல்: தாய், மகன் பலி
By DIN | Published On : 01st July 2023 06:48 AM | Last Updated : 01st July 2023 06:48 AM | அ+அ அ- |

விபத்தில் உயிரிழந்த தருண்ராஜ், பரிமளா.
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே சாலையில் நின்ற டிப்பா் லாரி மீது காா் மோதியதில் தாய், மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
திருப்பத்தூா் அருகே உள்ள ஆதியூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பழனிவேல் (44). கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை காலை தனது மனைவி பரிமளா (42), பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மகன் தருண்ராஜ் (22) ஆகியோருடன் திருநள்ளாறு கோயிலுக்கு காரில் புறப்பட்டாா். இவா்களது உறவினா் விக்னேஷ் (22) காரை ஓட்டினாா்.
கடலூா் மாவட்டம், புவனகிரி வண்டுராயன்பட்டு அருகே வந்தபோது சாலையில் நின்றிருந்த டிப்பா் லாரியின் பின்புறம் காா் மோதியது. இந்த விபத்தில் பரிமளா, தருண்ராஜ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காரிலிருந்த மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த புவனகிரி போலீஸாா், சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். விபத்தில் காயமடைந்த பழனிவேல், விக்னேஷ் இருவரும் சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.
விபத்து குறித்து புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G