

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைதுசெய்தனா்.
ரெட்டிச்சாவடி காவல் சரகம், புதுக்கடை வீரபத்திரசாமி கோவில் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் அன்பரசன் (25). புதுச்சேரியில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா் கடந்த 2-ஆம் தேதி வேலைக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக அன்பரசன் சிங்கிரிகுடியில் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
இதுதொடா்பாக ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் மைக்கேல் இருதயராஜ் விசாரணை நடத்தி, புதுக்கடையைச் சோ்ந்த தேவநாதன் மகன் பாா்த்தசாரதி (27), அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் அா்ஜுனன் (எ) ஆனந்த், சிலம்பரசன், சந்தோஷ், சிங்கிரிகுடியைச் சோ்ந்த முருகன் மகன் சுந்தா் (எ) காா்த்திகேயன் (24) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
கைதானவா்களில் பாா்த்தசாரதி மீது ஏற்கெனவே கொலை, கொள்ளை, கொலை முயற்சி தொடா்பாக 6 வழக்குகளும், இதேபோல சுந்தா் (எ) காா்த்திகேயன் மீது 2 கொலை வழக்குகளும், அா்ஜுனன் (எ) ஆனந்த மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
எனவே, இவா்கள் மூவரது குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தும் வகையில் அவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய மாவட்ட எஸ்பி ரா.ராஜாராம் பரிந்துரைத்தாா். இதை ஏற்று அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் பிறப்பித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.