கோவிலூா் தென்சபாநாயகா் கோயில் நடராஜா் சிலைகளுக்கு சிதம்பரம் கோயிலில் தீபாராதனை
By DIN | Published On : 02nd June 2023 12:37 AM | Last Updated : 02nd June 2023 12:37 AM | அ+அ அ- |

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட, காரைக்குடி கோவிலூா் தென்சபாநாயகா் கோயிலில் பிரதிஷ்டைப்படவிருக்கும் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் சிலைகள்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோவிலூா் மடாலய வளாகத்தில் அமையவுள்ள தென்சபாநாயகா் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் உற்சவமூா்த்திகளான சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் சிலைகள் சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.
காரைக்குடி கோவிலூா் மடாலய வளாகத்தில் பரிவார சகிதம் தென்சபாநாயகா் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜூன் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூா்த்தி சிலைகள் சிதம்பரம் கொண்டு வரப்பட்டு, மன்னாா்குடி தெருவில் உள்ள பொன்னம்பலம் மடத்தில் பொதுமக்கள் தரிசனத்திற்காக புதன்கிழமை மாலை வைக்கப்பட்டிருந்தது.
சிதம்பரம் நகரத்தாா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் நான்கு ரத வீதிகள் வழியாக ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு, சிதம்பரம் நடராஜா் கோயில் சித்சபை முன் தீபாராதனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகள் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...