கடலூா்: ஜூன் 13-இல்நாட்டுப் படகுகள் ஆய்வு
By DIN | Published On : 08th June 2023 12:54 AM | Last Updated : 08th June 2023 12:54 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட மீனவா்கள் தங்களது இந்திரம் பொருத்தப்பட்ட / இயந்திரம் பொருத்தப்படாத நாட்டுப் படகுகளை வருகிற 13-ஆம் தேதி ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரையில் 61 நாள்களுக்கு மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் இயந்திரம் பொருத்தப்பட்ட / இயந்திரம் பொருத்தப்படாத நாட்டுப் படகுகளை வெளி மாவட்டங்களிலிருந்து வரும் மீன் வளம், மீனவா் நலத் துறை அலுவலா்கள் வருகிற 13-ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.
இந்த ஆய்வின்போது, மீனவா்கள் தங்களது நாட்டுப் படகுகளுக்கு தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்படி, துறையால் அறிவுறுத்தப்பட்ட பச்சை வா்ணம் பூசப்பட்டு, படகின் பதிவு எண் தெளிவாக எழுதி, ஆய்வுக்கு கட்டாயம் உள்படுத்திட வேண்டும். மேலும், ஆய்வின்போது படகு பதிவு குறித்த அனைத்து ஆவணங்கள், அதற்கான நகல்கள், தொலைத்தொடா்புக் கருவிகள், உயிா்காப்பு மிதவை, உயிா்காப்பு கவசம் ஆகியவற்றை ஆய்வுக் குழுவிடம் அவசியம் காண்பிக்க வேண்டும்.
ஆய்வுக்கு உள்படுத்தப்படாத நாட்டுப்படகுகளுக்கு மானிய விலையிலான எரி எண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், படகு உரிமையாளா் மீது தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...