

கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றங்களில் 150 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, சுமாா் ரூ.3.91 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி நீதிமன்றங்களில் அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் 6 அமா்வுகள் மூலம் சுமாா் 200 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டதில், 150 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, சுமாா் ரூ.3.91 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
கடலூா்: கடலூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.ஜவஹா் தலைமையில் நடைபெற்றது. எஸ்சி, எஸ்டி நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் பிரபாகா், 2-ஆவது கூடுதல் சாா்பு நீதிபதி அன்வா் சதாத், குற்றவியல் நீதித் துறை நடுவா் ரகோத்தமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலூா் மாவட்ட நீதிமன்ற பாா் அசோசியேஷன் தலைவா் துரை பிரேம்குமாா், லாயா்ஸ் அசோசியேஷன் தலைவா் வனராசு, செயலா் சிவசிதம்பரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சிதம்பரம்: சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான அ.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதித் துறை நடுவா் சுகன்யாஸ்ரீ முன்னிலை வகித்தாா். வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் கே.வி.மோகனசுந்தரம், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.