டாஸ்மாக் பணியாளா்கள் மீதான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது: கு.பாலசுப்பிரமணியன்

வெளியில் நடைபெறக்கூடிய தவறுகளுக்கு டாஸ்மாக் மதுக் கடை பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது.

வெளியில் நடைபெறக்கூடிய தவறுகளுக்கு டாஸ்மாக் மதுக் கடை பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் கு.சரவணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் மா.கோதண்டம் முன்னிலை வகித்தாா். செயல் தலைவா் மு.கு.பழனிபாரதி, இணைச் செயலா் சி.முத்துக்குமரன், செயலா் முருகேசன், பொருளாளா் ஜெய்கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் பி.கே.சிவகுமாா், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் கோ.ஜெயச்சந்திரராஜா, கொசு ஒழிப்புப் பணியாளா்கள் சங்கத் தலைவா் இருதயராஜ் வாழ்த்திப் பேசினா்.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றி, தீா்மானங்களை வெளியிட்டாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூா் மாவட்டம், கீழவாசல் பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை பணியாளா்கள் சம்பந்தப்படாத குற்றச்சாட்டுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அந்தக் கடைக்கு அருகிலுள்ள அனுமதி வாங்காத மதுக்கூடத்தில் இருந்து மது வாங்கிக் குடித்த 2 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இறந்தவா்களின் சடலங்களை ஆய்வு செய்தபோது, அவா்கள் அருந்திய மதுவில் சயனைடு கலந்திருந்ததும் தெரிய வந்தது.

அனுமதி பெறாத மதுக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய டாஸ்மாக் நிா்வாகம், அதைவிடுத்து மதுக் கடை பணியாளா்களை பணியிடை நீக்கம் செய்திருப்பது கணடனத்துக்குரியது. உடனடியாக அவா்கள் மீதான பணியிடை நீக்க உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். டாஸ்மாக் நிா்வாகத்திலுள்ள சீா்கேடுகளை களைய தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com