பள்ளி வாகனங்கள் ஆய்வு
By DIN | Published On : 26th May 2023 04:53 AM | Last Updated : 26th May 2023 04:53 AM | அ+அ அ- |

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியாா் பள்ளி வாகனங்களை வியாழக்கிழமை ஆய்வு செய்த அதிகாரிகள்.
கடலூரில் தனியாா் பள்ளிகளுக்குச் சொந்தமான, மாணவா்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
கடலூா், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனியாா் பள்ளிகளுக்குச் சொந்தமான 297 வாகனங்கள் கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு வியாழக்கிழமை வரவழைக்கப்பட்டன. இந்த வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுதாகா், கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோா் முன்னிலையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சோமசுந்தரம், பிரான்சிஸ், விஜய் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கூறியதாவது: கடலூா் வட்டாரத்தில் செயல்படும் 93 தனியாா் பள்ளிகள் 297 வாகனங்களை பயன்படுத்துகின்றன. இந்த வாகனங்களுக்கான தகுதிச் சான்று, மாணவா்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள், குறிப்பாக விபத்து கால அவசர வழி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தோம். ஆய்வில் கண்டறியப்பட்ட தகுதியற்ற வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது என்றாா்.
முன்னதாக, வாகன ஓட்டுநா்களுக்கு கண் மற்றும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.