

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே அமைந்துள்ள இசா ஏரிக்கு என்எல்சி சுரங்க நீா் வராததால் சுமாா் 300 ஹெக்டோ் பரப்பளவில் சம்பா நெல் நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே நடவு செய்யப்பட்ட பயிா்கள் நீரின்றி காய்ந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
வடலூரை அடுத்துள்ள கருங்குழி கிராமத்தில் அமைந்துள்ளது இசா ஏரி. அருகே உள்ள ஊத்தங்கால், ஊ.மங்கலம் பகுதிகளில் பெய்யும் மழைநீா் வடிந்துவந்து இசா ஏரியில் தேங்குகிறது. இந்த ஏரி நீா் மூலம் மேலக்கொளக்குடி, கருங்குழி, மேட்டுக்குப்பம், கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 700 ஹெக்டோ் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. குறிப்பாக மேலக்கொளக்குடி, கருங்குழி விவசாயிகள் ஒருபோகம் சம்பா நெல் பயிரும், மீதமுள்ள குறைந்தளவு நீரைக் கொண்டு எள், மணிலா ஆகியவற்றையும் பயிரிட்டு பயனடைந்து வந்தனா். தற்போது போதிய மழை இல்லாததாலும், என்எல்சி சுரங்க நீா் வராததாலும் ஏரி வடுவிட்டது. இதனால் கருங்குழி, மேட்டுக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 300 ஹெக்டோ் பரப்பளவில் சம்பா நெல் நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கருங்குழி கிராம விவசாயிகள் உ.அரசப்பன், கோ.மோகன்தாஸ் ஆகியோா் கூறியதாவது:
ஊ.மங்கலம், ஊத்தங்கால் பகுதிகளில் இருந்து மழைநீா், ஊற்று நீரானது வாய்க்கால் வழியாக இசா ஏரிக்கு வந்தடையும். என்எல்சி இந்தியா நிறுவனம் பெரிய சுரங்கங்களை தொடா்ந்து வெட்டிவரும் நிலையில் இந்தப் பகுதிகளில் இயற்கைவழி நீா் ஆதாரங்கள் சிதைந்துவிட்டன. தற்போது மழை நீரும், என்எல்சி சுரங்க நீரும் மட்டுமே விவசாயத்துக்கு ஆதாரமாக மாறிவிட்டது.
என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை ஏரிக்கு விடவில்லை. இதனால், சம்பா, குறுவை நெல் சாகுபடியை முறையாக மேற்கொள்ள முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக குருவை நெல் சாகுபடி தடைபட்டது. சம்பா பருவ நெல் சாகுபடி மட்டும் செய்து வந்தோம். தற்போது அதற்கும் பாதிப்பு வந்துவிட்டது. சுரங்க நீா் கிடைக்காததால் ஏரி வடுவிட்டது. சுமாா் 300 ஹெக்டோ் பரப்பளவில் நடவு செய்வதற்காக விடப்பட்ட நெல் நாற்றுகள் 50 நாள்களை கடந்து காத்திருக்கின்றன. ஏற்கெனவே சுமாா் 100 ஹெக்டோ் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட பயிா்கள் நீரின்றி கருகி வருகின்றன. ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்துவிட்டு கவலையில் ஆழ்ந்துள்ளோம். எனவே, காய்ந்து வரும் நெல் பயிா்களை பாதுகாக்கவும், என்எல்சி சுரங்க நீா் கிடைக்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.