சிதம்பரம் தில்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
By DIN | Published On : 04th September 2023 12:13 PM | Last Updated : 04th September 2023 12:19 PM | அ+அ அ- |

சிதம்பரத்தில் அமைந்துள்ள தில்லையம்மன் கோயில் மற்றும் தில்லைக்காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் எல்லையில் உள்ள இத்திருக்கோயில் சுமார் 725 ஆண்டுகளுக்கு முன் கோப்பெருஞ்சிங்கன் என்ற சோழ மன்னனால் கட்டப்பட்டுள்ளது. சிவம் பெரியதா, சக்தி பெரியதா என்ற விவாதம் கைலையங்கிரியில் சிவனுக்கும் சக்திக்கும் இடையே ஏற்பட்டது. சிவமும் சக்தியும் ஒன்றே என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தவும், பார்வதி தேவியின் கர்வத்தை அடக்கவும், சிவபெருமான் பார்வதி தேவியை, காளியாக மாறுமாறு சபித்துவிடுகிறார். காளியான பார்வதி தேவியார் சிதம்பரம் தில்லைவனத்தில் வந்து தங்கிவிடுகிறார். வனத்தில் தங்கி இருந்து முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் தீங்கு செய்யத் தொடங்கினாள், ஆனந்தத் தாண்டவம் புரியும் ஈசனையும் ஆடல் போட்டிக்கு அழைத்தாள். ஈசனும் காளியும் ஆடிக்கொண்டு இருந்தனர், ஈசன் தனது காதில் அணிந்திருந்த குண்டலத்தைக் கீழே விழச்செய்து விழுந்த அக்குண்டலத்தைக் காலினாலே எடுத்து காதில் பொருத்திக்கொண்டார்.
இத்தாண்டவத்திற்கு ஊர்த்துவ தாண்டவம் என்றும் பெயர், காளி தேவி பெண் என்பதால் நாணமுற்று ஈசனைப் போன்று ஊர்த்துவ தாண்டவம் ஆட மறுக்கிறாள். தில்லையின் எல்லைக்கு சென்று கிழக்கு நோக்கி அமர்ந்தாள். தேவர்களும், முனிவர்களும் வேண்டிக்கொண்டதற்கு இணங்க சினம் நீங்கி நான்கு முகம் கொண்ட பிரம்ம சாமுண்டீஸ்வரியாக உருக்கொண்டு தில்லை அம்மன் ஆனாள். இறைவனுடன் சிவகாமியாக இணைந்து காளியின் சாபம் நீங்கப்பெற்றார். இவ்வாறாக தீயவைகளை அழிக்கும் கோப சக்தியாக தில்லைகாளியும் நல்லவைகளை அருளும் சாந்த சொரூபினியாக, தில்லையம்மனும் ஆக இருவடிவமாக இத்திருக்கோயில் இருந்து அருளாட்சி புரிகிறார், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆக.30-ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.
செப்.1-ம் தேதி வெள்ளிக்கிழமை கோயிலுக்கு எதிர்புறம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் காலை கடம் யாகசாலை பிரவேசமும், மந்த்ர ஜபம் மற்றும் விசேஷ அர்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. மாவை முதல்கால யாகாசாலை பூஜை தொடங்கப்பட்டு, மகா பூர்ணாஹூதி, வடுக பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. செப்.2-ம் தேதி சனிக்கிழமை காலை 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 3-ம் கால யாகசாலை பூஜையும், மகாபூர்ணாஹூதி மற்றும் மகா தீபாரதனையும், செப்.3-ம் தேதி காலை 4-ம் கால யாகபூஜையும், மதியம் 5-ம் கால யாகபூஜையும் , இரவு 6-ம் கால யாகபூஜையும், ரஷாபந்தனம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
செப்.4-ம் திங்கள்கிழமை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வபூஜை, மகா தீபாராதனை பின்னர் கடயாத்ராதானம் நடைபெற்றது. பின்னர் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் விமானத்தை அடைந்து, காலை 9.40 மணிக்கு கன்னியா லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சாமுண்டி அம்மன் (தில்லைக்காளியம்மன்), தில்லை நான்முகி அம்மன் (தில்லையம்மன்), சபரிவாரஸ்வாமிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விமான கலசத்திற்கு பொதுதீட்சிதர்கள் கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.ராஜாராம் மேற்பார்வையில், ஏடிஎஸ்பி அசோக்குமார், டிஎஸ்பி ரூபன்குமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...