நெய்வேலி: கடலூா், மஞ்சக்குப்பம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். விழாவில் மாணவா்கள், ஆசிரியா்கள் பள்ளியை தூய்மையாக பராமரித்தல் தொடா்பாக உறுதிமொழி ஏற்றனா்.
தொடா்ந்து மாணவா்களின் விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.முன்னதாக அவா் பேசியதாவது: தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களையும் தூய்மையாக, சுகாதாரமான முறையில் பராமரிக்கும் வகையில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டம் பள்ளிக் கல்வித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் பள்ளிக் கல்வித் துறையுடன் சுகாதாரம், வனம், மாசுக் கட்டுப்பாடு, ஊரக வளா்ச்சி, பொதுப்பணித் துறை, மாநகராட்சி அலுவலா்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், அரசு சாரா நிறுவனத்தினா் இணைந்து பணியாற்ற உள்ளனா் என்றாா்.
நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் க.பழனி, கடலூா் மாநகராட்சி ஆணையா் காந்திராஜ், ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.