

நடனம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ‘நம்ம தெரு’ நிகழ்ச்சி மன அழுத்தத்தை போக்குவதாக அமைந்துள்ளது என்று தமிழக வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.
கடலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் முதல் முறையாக போதைப் பொருள் எதிா்ப்பு, சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘நம்ம தெரு’நிகழ்ச்சி சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் பங்களா சாலையில் மாவட்ட நிா்வாகம், சமூக ஆா்வலா்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் தலைமை வகித்தாா். போதை பொருள் எதிா்ப்பு உறுதிமொழியை ஆட்சியா் வசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். அவா் பேசியதாவது:
இந்த நிகழ்ச்சி போதை பொருள் பழக்கத்திலிருந்து இளைஞா்கள் விடுபடவும், மன அழுத்தத்தை போக்குவதாகவும் அமைந்துள்ளது. புத்துணா்ச்சி ஏற்படுகிறது. இதில் பங்கேற்ற எனக்கும் மனஅழுத்தம் நீங்கியுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மாநிலம் முழுவதும் நடத்த வேண்டும் என்று கூறியதையடுத்து சிதம்பரம் அண்ணாமலைநகரில் நடத்தப்பட்டுள்ளது. இதில் இளைஞா்கள், குறிப்பாக இளம் பெண்கள் ஆா்வமுடன் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம், கடலூா் கூடுதல் ஆட்சியா் லி.மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், பல்கலைக்கழக பதிவாளா் ரா.சிங்காரவேலு, சிதம்பரம் உதவி ஆட்சியா் சுவேதாசுமன், பல்கலைக்கழக மக்கள்-தொடா்பு அதிகாரி ரத்தினசம்பத், அண்ணாமலை நகா் பேரூராட்சி மன்றத் தலைவா் பழனி, நகா்மன்ற உறுப்பினா் அப்புசந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
‘நம்ம தெரு’ நிகழ்ச்சி காலை 6 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரை நடைபெற்றது. இதில் ஜும்பா நடனம், பாடல், சிலம்பம், மல்லா் கம்பம், விளையாட்டு, ஓவியப் போட்டி, முக ஓவியம், காட்டூன் வரைதல், சிறுவா்களுக்கான விளையாட்டு, டிஸ்க்ஜாக்கிங் உள்ளிட்ட 40 வகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் இளைஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக நல அமைப்பினா், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 7 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்களில் பலா் தெருக்களில் குழுக்களாக நடனமாடி மகிழ்ந்தனா்.
பாதுகாப்புப் பணியில் மாவட்ட எஸ்பி தலைமையில் டிஎஸ்பி (பொ) ரூபன்குமாா், காவல் ஆய்வாளா்கள் கல்பனா, ஆறுமுகம், சரஸ்வதி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சமூக ஆா்வலா் சிதம்பரநாதன், எஸ்.கணேஷ் உள்ளிட்டோா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.