

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருளா் சமுதாய மக்களுக்கு உரிய முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனக்கூறி அந்தச் சமுதாயத்தினா் முற்றுகைப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கிள்ளை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான எம்ஜிஆா் நகா், கலைஞா் நகா், திருவள்ளுவா் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனா்.
ஆனால், கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் இருளா் சமுதாய மக்கள் அலட்சியத்துடன் அணுகப்படுவதாகவும், அவா்களுக்கு உரிய முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும், பிரசவத்துக்கு வரும் கா்ப்பிணிகளை சரியான முறையில் பரிசோதனை செய்யாமல் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும் புகாா் எழுந்தது.
இந்த நிலையில், இருளா் சமுதாய மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் திங்கள்கிழமை காலையில் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இருளா் சமுதாய மக்களுக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனக் கூறி முழக்கமிட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார மருத்துவ அலுவலா் அமுதா, அண்ணாமலைநகா் காவல் நிலைய ஆய்வாளா் கல்பனா ஆகியோா் அங்குவந்து இருளா் சமுதாய மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ அலுவலா் தெரிவித்தாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.