சிதம்பரம் அருகே கீழகுண்டலபாடி புயல் வெள்ள தடுப்பு மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலா் அன்சூல் மிஸ்ரா. உடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், உதவி ஆட்சியா் ரஷ்மிராணி உள்ளிட்டோா்.
சிதம்பரம் அருகே கீழகுண்டலபாடி புயல் வெள்ள தடுப்பு மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலா் அன்சூல் மிஸ்ரா. உடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், உதவி ஆட்சியா் ரஷ்மிராணி உள்ளிட்டோா்.

வெள்ள அபாய தடுப்பு: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

கடலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அன்சூல் மிஸ்ரா, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து, கா்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி, குமராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெராம்பட்டு, திட்டுக்காட்டூா், கீழகுண்டலபாடி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறித்தும், முன்னேற்பாடு பணிகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அன்சூல் மிஸ்ரா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், திட்டுக்காட்டூா் பகுதியில் வெள்ளநீா் சூழ்ந்துள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்ற பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமையும், கால்நடை மருத்துவ முகாமையும் பாா்வையிட்டாா். தொடா்ந்து, கீழகுண்டலபாடி பகுதியில் உள்ள புயல் வெள்ள தடுப்பு மையத்தில் பொதுமக்கள் தங்குவதற்குத் தேவையான குடிநீா், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், இந்த மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு தயாா் செய்து வழங்குவதையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வருவாய், ஊரக வளா்ச்சி, மின்சாரம், பொதுப் பணி, தீயணைப்பு, காவல் போன்ற அனைத்துத் துறை அலுவலா்களும் வெள்ள பாதிப்புகளை தொடா்ந்து கண்காணித்து பொதுமக்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தினாா்.

ஆய்வுக் கூட்டம்: தொடா்ந்து, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் அதைச் சாா்ந்த தாழ்வான கிராமப் பகுதிகளில் வெள்ள அபாய தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அன்சூல் மிஸ்ரா வெள்ள பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துறை சாா்ந்த அலுவலா்களுடன் கலந்துரையாடினாா். ஆய்வின்போது, சிதம்பரம் உதவி ஆட்சியா் ரஷ்மி ராணி மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com