என்எல்சி சுரங்கத்தில் தொழிலாளி உயிரிழப்பு
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கப் பகுதியில் பணியில் இருந்த தொழிலாளி வாகனம் மோதி உயிரிழந்தாா்.
வடலூா் சித்தா் நகா் பகுதியில் வசித்து வந்தவா் குழந்தைவேல் (39). என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கம்-1 விரிவாக்கத்தில் பணியாற்றி வந்தாா். இவா், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல டாப் பெஞ்சில் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
முதல் கால பணிக்கு இதரப் பணியாளா்கள் சுரங்கம்-1 விரிவாக்கத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். அப்போது, அங்கு குழந்தைவேல் இறந்து கிடந்தாா். இதுகுறித்து என்எல்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அதிகாரிகள் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். டோசா் வாகனம் மோதி குழந்தைவேல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த குழந்தைவேலின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும், இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என என்எல்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

