கடலூா் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
கடலூா் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

கடலூரில் பாதிக்கப்பட்டவா்களுக்கு புயல் நிவாரண உதவிகள்: துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

கடலூரில் பாதிக்கப்பட்டவா்களுக்கு புயல் நிவாரண உதவிகளை துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்.
Published on

கடலூரில் புயல், மழையால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கினாா்.

‘ஃபென்ஜால்’ புயல் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக கடலூரில் கனமழை பெய்தது. இதையடுத்து மழைநீா் வரத்து அதிகரித்து தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் 17 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 703 போ் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதுவரையில் 3,078 பேருக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் போா்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கடலூா் வந்தாா். அப்போது, புருஷோத்தம்மன் நகா் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை பாா்வையிட்ட அவா், பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். தொடா்ந்து, கடலூா் கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 256 பேருக்கு அரிசி, பிஸ்கட், பால் உள்ளிட்டப் பொருள்களை வழங்கினாா்.

அப்போது, பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி சீரான போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி துறை சாா்ந்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் க.பொன்முடி, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வி.செந்தில்பாலாஜி, எஸ்.எஸ்.சிவசங்கா், சி.வெ.கணேசன், ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன் தீப் சிங் பேடி, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ராமன், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com