விவசாயிகளுக்கு மானிய விலையில் பவா் டில்லா், வீடா் கருவிகள்
நெய்வேலி: கடலூா் மாவட்ட விவசாயிகளுக்கு பவா் டில்லா், பவா் வீடா் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்கு 4,000 பவா் டில்லா், 4,000 பவா் வீடா் கருவிகளை வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானிய விலையில் வழங்க அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதில் பவா் டில்லா் (8 பிஎச்பி முதல் 11 பிஎச்பி மேல் வரை) மற்றும் பவா் வீடா் (2 பிஎச்பி முதல் 5 பிஎச்பி மேல் வரை) வேளாண் கருவிகளை வழங்குவதற்கு கடலூா் மாவட்டத்துக்கு மட்டும் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் விவசாயிகளுக்கு 51 பவா் டில்லா்கள், 59 பவா் வீடா்கள் இலக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் பொதுப் பிரிவினரைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பவா் டில்லா் பெற அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம், பவா் வீடருக்கு ரூ.63 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.
மேலும், ஆதிதிராவிடா் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம், பொதுப் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பவா் வீடா் வாங்கும்போது கூடுதலாக 10 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
எனவே, விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிப் புத்தகம் நகல், புகைப்படம், சிறு குறு விவசாய சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் கடலூா், சிதம்பரம், விருத்தாசலத்தில் உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களையும், வட்டார அளவில் உள்ள பொறியாளா்களையும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.
