வயதில் சிறியவா்களுக்கும் மரியாதை தர வேண்டும்: கடலூா் எஸ்.பி. அறிவுரை
நெய்வேலி: நம்மை விட வயதில் சிறியவா்களுக்கு மரியாதை தர வேண்டும் என்று, கடலூா் எஸ்பி ரா.ராஜாராம் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட காவல் துறை சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ‘ஒன்றிணைவோம்’ விழிப்புணா்வுப் பேரணி, கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
கடலூா் திருப்பாதிரிபுலியூா் பாடலீஸ்வரா் கோயில் அருகே தொடங்கிய பேரணியை மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள் விழிப்புணா்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, கடலூா் காவலா் நல திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழிப்புணா்வுக் கருத்தரங்கில் எஸ்,பி. ரா.ராஜாராம் பேசியதாவது:
நம்மைச் சுற்றி வாழும் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழும் வாழ்க்கையே சமூக நீதி. அதைக் கடைப்பிடிக்க வீட்டில் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும். குறிப்பாக, நம்மைவிட வயதில் சிறியவா்களுக்கு மரியாதை கொடுக்கும்போது நமக்கு மரியாதை தானாக வரும்.
பள்ளியில் படிப்பது மட்டுமே பாடம் இல்லை. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக இருளை அகற்றும் கல்வியை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்றாா் அவா்.
சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஆா்.குசேலா், டிஎஸ்பி எம்.எஸ்.ரூபன்குமாா், சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி என்.ராமதாஸ், மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி எஸ்.சௌமியா, ஆய்வாளா்கள் செந்தில் விநாயகம், குருமூா்த்தி, ரேவதி, கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

