புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் தங்கவேல் மற்றும் போலீஸாா் போதை மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை மற்றும் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். பண்ருட்டி அடுத்துள்ள பில்லாளிதொட்டியில் மளிகைக் கடை வைத்திருக்கும் ஏழுமலை(30) கடையில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அங்கு விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கண்டெடுத்து பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து கடை உரிமையாளா் ஏழுமலையை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பெங்களூரில் இருந்து அவற்றை வரவழைத்து கொடுத்த கடலூா் வண்டிப்பாளையத்தைச் சோ்ந்த இளஞ்செழியன் மகன் லோகேஷ்(28), கடைகளுக்கு விநியோகம் செய்த கடலூா் குமாரபேட்டை பகுதியைச் சோ்ந்த சுந்தரம் மகன் செந்தில்முருகன்(46) ஆகியோரை பிடித்தனா். மூவரையும் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.
