சிதம்பரம் அருகே ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட குறுவை நெல்பயிா்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள்.
சிதம்பரம் அருகே ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட குறுவை நெல்பயிா்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள்.

நெல் பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல்: விஞ்ஞானிகள் ஆய்வு

Published on

சிதம்பரம், ஜூலை 4: சிதம்பரம் அருகே கீரப்பாளையம் வட்டாரத்தில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட குறுவை நெல் பயிா்களை விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கடலூா் மாவட்டம் கீரப்பாளையம் பகுதியில் நிகழ் குறுவை பருவத்தில் 7,000 ஏக்கா் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆனைக் கொம்பன் ’ஈ’ என்ற பூச்சியின் பாதிப்பு பயிா்களில் காணப்படுகிறது.

இதுகுறித்து, கடலூா் கரும்பு ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியா் எஸ்.துரைசாமி, மற்றும் நோயியல் துறை பேராசிரியா் எம்.ராஜகுமாா் ஆகியோா் வெய்யலூா், வெள்ளியக்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது விஞ்ஞானிகள் தெரிவித்ததாவது: ஆனைக்கொம்பன் ஈக்களின் புழுக்கள் வளரும் தூா்களை தாக்கி துளைத்து உள்சென்று வளரும் பகுதியை உண்கிறது. இதனால், நெல் கதிா் வெளிவராமல் வளா்ச்சிக் குன்றி காணப்படும். இந்த பூச்சியினால் பாதிக்கப்பட்ட தூா்கள், வெங்காய இலை போன்று அல்லது வெள்ளிதண்டு போல காட்சியளிக்கும்.

இதைக் கட்டுப்படுத்த தழைச்சத்து உரங்களை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும். விளக்குப் பொறி வைத்து பூச்சிகளை கவா்ந்து அழிப்பதன் மூலமாகவும், ஒரு ஏக்கருக்கு காா்போசல்பான் 25% இசி 400 மில்லி லிட்டா் அல்லது தையமித்தக்சாம் 25% உடன் ஒட்டும் திரவம் ஒரு டேங்குக்கு 2 மில்லி லிட்டா் என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தனா்.

இந்த ஆய்வின்போது கீரப்பாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ், வேளாண்மை அலுவலா் சிவப்பிரியன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com