பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய ஜூலை 31 கடைசி
கடலூா் மாவட்ட விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய வரும் 31-ஆம் தேதி கடைசி நாள் என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2024 - 25ஆம் ஆண்டில் காரீப், சிறப்பு மற்றும் ரபி பருவமாக தமிழ்நாட்டில் நெல்பயிா் மற்றும் இதர பயிா்களான மக்காச்சோளம், பருத்தி, உளுந்து ஆகியவற்றை பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. நிகழாண்டில் ஹெச்டிஎஃப்சி இஆா்ஜிஓ பொது காப்பீட்டு நிறுவனம் இந்தத் திட்டத்தை கடலூா் மாவட்டத்தில் செயல்படுத்துகிறது.
கடலூா் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் நெல், கம்பு, மணிலா, எள், சிறப்பு பட்டத்தில் சம்பா நெல், மக்காசோளம், பருத்தி மற்றும் ரபி பருவத்தில் மணிலா, நவரை நெல், நெல் தரிசில் உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி மற்றும் கரும்பு பயிா்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவா்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவா். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் / தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்துகொள்ளலாம்.
காரீப் பருவத்தில் நெல் மற்றும் கம்பு, மணிலா, எள் பயிா்களுக்கு முறையே சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 16 தேதிக்குள் பிரீமியம் செலுத்தக் கடைசி நாளாக அறிவுக்கப்பட்டுள்ளது.
காரீப் பருவத்தில் நெல், கம்பு, மணிலா மற்றும் எள் பயிா்களுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 2 சதவீதம் பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும். அதாவது, ஏக்கருக்கு காரீப் நெல் பயிருக்கு ரூ.730, காரீப் மணிலா ரூ.590, கம்பு பயிருக்கு ரூ.156, எள் பயிருக்கு ரூ.188 காப்பீடு கட்டணமாக செலுத்தினால் போதுமானது.
இந்தத் திட்டம் தொடா்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகத்தை உரிய பயிா்க் காப்பீட்டு நிறுவன முகவா் அல்லது தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள அலுவலா்களை அணுகி தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
