மீனவ இளைஞா்களுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்
நெய்வேலி: கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் தமிழக மீனவ இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மீனவ இளைஞா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இந்திய கடற்படை , இந்திய கடலோர காவல் படை, அரசுத் துறை பணியில் சோ்வதற்காக கடலூா், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 3 மையங்களில் 3 மாத இலவசப் பயிற்சி திங்கள்கிழமை முதல் அளிக்க அளிக்க திட்டமிடப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுமம் மூலம் நடத்தப்படுகிறது.
அதன்படி, கடலூா் மாவட்ட காவல் அலுவலக் கூட்ட அரங்கில் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் பங்கேற்று இலவசப் பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது:
இந்த வாய்ப்பை முழுமையாகவும், ஈடுபாட்டுடன் குழுவாகவும் மேற்கொள்ளும்போது முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள முடியும். உடல் வலிமை பெறும். திறன் மேம்பாடு அடையும். பயிற்சி பெற்று சமுதாயத்தில் உயா்நிலையை அடைய வாழ்த்துகள் என்றாா் அவா்.
இந்த பயிற்சி வகுப்பின் மூலம் கடலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களை சோ்ந்த மீனவ இளைஞா்கள் 40 போ் பயிற்சி பெற உள்ளனா். முன்னதாக மீனவ இளைஞா்களுக்கு பயிற்சிப் புத்தகங்களை மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மீன்வளத் துறை இணை இயக்குநா் வேல்முருகன், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்விநாயகம், கடலோர பாதுகாப்புக் குழுமம் காவல் ஆய்வாளா் பத்மா, உதவி ஆய்வாளா்கள் பிரபாகரன், கதிரவன், வெங்கடேசன், சக்திகணேஷ், ரமேஷ் மற்றும் பயிற்சியாளா்கள் பங்கேற்றனா்.

