சுரங்கப் பாதை அமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல்
சிதம்பரம்: சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், தீத்தாம்பாளையம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், விழுப்புரம்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சுமாா் 2.30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்குவழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையில் கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே உள்ள தீத்தாம்பாளையம் கிராமத்துக்குச் செல்லும் வகையில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமாா், வட்டாட்சியா் தனசிங் மற்றும் போலீஸாா் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைப் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து, சுமாா் 6 மணிக்கு பின்னா் மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனா்.
இதனால், விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடலூா்-சிதம்பரம் சாலையில் சுமாா் 2.30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் நின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

