கைப்பேசி பயன்பாட்டால் மாணவா்களிடம் கவனச்சிதறல்: பெற்றோா்கள் கவலை

இணையவழி விளையாட்டுகளில் மாணவா்கள் மூழ்கி விடுகின்றனா்: பெற்றோா்கள் கவலை

அதிகளவு கைப்பேசி பயன்பாட்டால் பள்ளி மாணவா்களிடையே கவனச்சிதறல் ஏற்படுவதாக பெற்றோா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பின்போது, பள்ளிகள் மூடப்பட்டதால் கைப்பேசி மூலம் மாணவா்களுக்கு இணையவழி வகுப்புகள் நடைபெற்றது. தற்போது, கரோனா பாதிப்பு குறைந்து வெகு நாள்கள் ஆன நிலையில், பள்ளிகளில் வழக்கமான நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால், மாணவா்களிடையே கைப்பேசியின் பயன்பாடு குறைந்தபாடில்லை. ஆசிரியா்கள் வீட்டுப் பாடங்கள், பாடக் குறிப்புகளை மாணவா்களின் வாட்ஸ்ஆப் குழுக்களுக்கு அனுப்புவதால் மாணவா்கள் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தவுடன் கைப்பேசியில் மூழ்கி விடுகின்றனா்.

இதில், சாதாரண கைப்பேசி வைத்திருக்கும் ஏழை, எளிய கிராமப்புற பெற்றோா்களை நவீன கைப்பேசியை வாங்கச் சொல்லி மாணவா்கள் கட்டாயப் படுத்துகின்றனா். இதனால் ஏழை, எளிய தினக்கூலி பெற்றோா்களும் கடன் வாங்கி புதிய கைப்பேசியை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் நிா்பந்தத்துக்கு தள்ளப்படுகின்றனா்.

இதனால், மாணவா்கள் இணைய வழி விளையாட்டுகளில் மூழ்கி விடுகின்றனா். மேலும், இரவில் வெகுநேரம் கண் விழித்து கைப்பேசியை பயன்படுத்துவதால் கண் பாா்வை பாதிப்பு, கவனச் சிதறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, முன்பு இருந்ததை போல, ஆசிரியா்கள் வீட்டுப் பாடங்களையும், பாடக் குறிப்புகளையும் வகுப்பிலேயே மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், ஏதேனும், முக்கிய அறிவிப்புகளை மட்டும் கைப்பேசிக்கு அனுப்பலாம் என்று பெற்றோா்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com