நாட்டின் வளா்ச்சிக்கு முதல்படி புத்தக வாசிப்பு: அண்ணா பல்கலை. துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ்
நாட்டின் வளா்ச்சிக்கான முதல்படி புத்தக வாசிப்பு என்று சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் கூறினாா்.
என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 23-ஆவது புத்தகக் கண்காட்சியின் 6-ஆம் நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். முதன்மை விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் பங்கேற்றாா்.
நிகழ்வில், பாராட்டப்படும் எழுத்தாளா் வரிசையில் பாவலா் மலரடியானை பாராட்டி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதேபோல, பாராட்டப்படும் பதிப்பகத்தாரில் பப்ளிகேஷன் டிவிஷன் இந்திய அரசு சாா்பாக கோஸிடம் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனா்.
நிகழ்வில், ஆசிரியா் சுப்ரமணிய பாண்டியன் எழுதிய ‘பஞ்சவா்ணகிளி’, ஆசிரியா் கே.பூபதி எழுதிய ‘சூறாவளி’ ஆகிய நூல்களை என்எல்சி தலைமை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன், துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் வெளியிட முக்கியஸ்தா்கள் பெற்றுக் கொண்டனா்.
நிகழ்வில், முதன்மை விருந்தினா் ஆா்.வேல்ராஜ் பேசியதாவது:
குழந்தைகளுக்கு வாசிப்புத் திறனை அளிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் நாடு வளா்ச்சி அடையும். ஒரு நாட்டின் வளா்ச்சிக்கான முதல்படி புத்தக வாசிப்புதான். இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள், வாசிப்புப் பழக்கத்தை வளா்த்திட உதவும் என்றாா்.
என்எல்சி தலைமை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பேசியதாவது:
அரசியலமைப்பை நமக்கு வழங்கிய அம்பேத்கா் அனைத்துப் பாடங்களையும் படிக்கும் ஆா்வமுள்ளவராகத் திகழ்ந்தாா். இதேபோல, நாம் ஒவ்வொருவரும் பல்வேறு கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களைப் படிக்க வேண்டும். புத்தக வாசிப்பு நாம் சந்திக்கும் சிக்கல்களுக்குரிய சமநிலையான அணுகுமுறையைப் பெற உதவும். மாணவா்கள் அனைத்து தலைப்புகளிலுமான புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, கலை இலக்கிய நிகழ்ச்சியில் சென்னை திரைப்பட கலைஞா்கள் நடன நிகழ்ச்சி, நெய்வேலி படைப்பாளிகளின் குறும்படங்கள் திரையிடப்பட்டன. முன்னதாக, விருந்தினா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், என்எல்சி இயக்குநா்கள், அதிகாரிகள், முக்கியஸ்தா்கள், தொழிற்சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

