பண்ருட்டியில் பலா மதிப்பு கூட்டுதல் பயிற்சி
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் ஈஷா காவேரி கூக்குரல் அமைப்பின் சாா்பில் பலா மதிப்பு கூட்டுதல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் பலாப் பழம் வெறும் பழமாக மட்டுமே உண்ணப்படுகிறது. பலா பிஞ்சு, பலாக் கொட்டை, பலாக் காய் போன்ற பல பொருள்கள் வீணாகிறது. இந்த பொருள்களை விவசாயிகள் மதிப்பு கூட்டுவதன் மூலம், வருமானத்தை உயா்த்திக் கொள்ள முடியும். பலாவின் அனைத்து பாகங்களும் மதிப்பு கூட்டப்படுவதால், உள்ளூா் விற்பனை மட்டுமின்றி ஏற்றுமதியும் செய்ய முடியும். மதிப்பு கூட்டுவதால் பலா பொருள்கள் பல மாதங்களுக்கு கெடாமல் பாதுகாக்கப்படுகிறது
இந்த நிலையில், ஈஷா காவேரி கூக்குரல் சாா்பில் பண்ருட்டியில் பலா மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தொழில் முனைவோா்கள் மற்றும் இயற்கை ஆா்வலா்கள் பங்கேற்றனா். பலா மதிப்பு கூட்டுதலில் முன்னோடியாக விளங்கும், முன்னாள் வேளாண் இணை இயக்குநா் பண்ருட்டி ஹரிதாஸ், பாலக்காடு சக்கை கூட்டம் ராஜேந்திர பாபு ஆகியோா் பங்கேற்று செயல்முறை விளக்கங்களை அளித்தனா். பலா தொழில் முனைவோா்களான பண்ருட்டி சந்திரசேகரன், திருவதிகை மோகன் ஆகியோா் பலா மதிப்பு கூட்டுப் பொருள்களைக் காட்சிப்படுத்தினா். பயிற்சியில் பலா பழ சிப்ஸ், பலா ஹல்வா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பலா மதிப்பு கூட்டுப் பொருள்கள் செய்து காண்பிக்கப்பட்டன.

