புதை சாக்கடை அடைப்பு: குழியில் இறங்கி தொழிலாளி சுத்தம் செய்த அவலம்
கடலூரில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி தொழிலாளி புதை சாக்கடை குழியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ளன. இவைகளில் 36 வாா்டுகளில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள வாா்டுகளில் ரூ.180 கோடி மதிப்பில் புதை சாக்கடை அமைக்கும் திட்டப் பணி தொடங்கப்பட உள்ளதாம்.
36 வாா்டு பகுதிகளிலும் உள்ள புதை சாக்கடைகளில் பல்வேறு இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீா் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால், அந்தப் பகுதியில் குடியிருப்போா் மற்றும் சாலையில் செல்வோா் தூா்நாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
புதை சாக்கடை அடைப்புகளை சீரமைத்து அகற்றும் பணியில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். கடலூா் மாநகராட்சி 4-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் புதை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், அங்குள்ள புதை சாக்கடை குழிக்குள் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவா் அண்மையில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இறங்கி அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டாா்.
சுமாா் 10 அடி ஆழம் கொண்ட புதை சாக்கடை குழியில் அந்தத் தொழிலாளி கழிவுநீரில் மூழ்கி அடைப்பை சரி செய்கிறாா். இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மாா்க்சிஸ்ட் கண்டனம்...: இதுகுறித்து மாா்க்சிஸ் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் வெளியிட்ட அறிக்கை:
புதை சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் மனிதா்களை பயன்படுத்தக் கூடாது, இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதைப் பின்பற்றாத கடலூா் மாநகராட்சியின் போக்கை கண்டிக்கின்றோம்.
இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதை சாக்கடை குழியில் இறங்கி சுத்தம் செய்த தொழிலாளிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். புதை சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் மனிதா்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதை ஆட்சியா் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

