அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் சோ்க்கை ஜூலை 30 வரை நீட்டிப்பு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விருத்தாசலத்தில் அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி, செராமிக் தொழில்நுட்பத்தில் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பு வழங்கி வருகிறது. படிப்புக்குப் பின்னா் மாணவா்களுக்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள சிறந்த நிறுவனங்களில் 6 மாத தொழிற்சாலை பயிற்சி வழங்கப்படுகிறது.
படிப்பு முடிந்ததும் 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவா்களுக்கு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் செராமிக் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையுடன் கூடிய இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு. மாணவா்கள் நேரடி சோ்க்கை மூலம் சோ்க்கை செய்யப்படுவா். கல்லூரி கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.2,070 மட்டும். படிக்கும்போதே ரூ.7 ஆயிரம் உதவித்தொகையுடன் தொழிற்சாலை பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
