ஊராட்சிகளில் பெண் குழந்தை பிறப்பு சதவீதம் சரிவு

ஊராட்சிகளில் பெண் குழந்தை பிறப்பு சதவீதம் சரிவு

5 ஊராட்சிகளில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் சரிவு
Published on

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட 5 ஊராட்சிகளில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் சரிந்துள்ளதாக வட்டார வளா்ச்சி அலுவலா் என்.சக்தி கவலை தெரிவித்தாா்.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டம்.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டம்.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் சபா.பாலமுருகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் தேவகி ஆடலரசு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.சங்கா், என்.சக்தி முன்னிலை வகித்தனா். மேலாளா் ராஜ்குமாா் வரவேற்றாா். உதவியாளா் அம்பிகா தீா்மானங்களை வாசித்தாா். மன்றத்தில் கொண்டுவரப்பட்ட 29 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

ரா.தனபதி (சுயேச்சை): மேலிருப்பு - சின்னகாட்டுபாளையம் இடையே தாா்ச்சாலை அமைக்க வேண்டும். மேலிருப்பு தடுப்பணையில் சோ்ந்துள்ள மணலை தூா்வார வேண்டும். முத்தாண்டிக்குப்பம் - ஏரிப்பாளையம் சாலையில் மேலிருப்பு பகுதியில் சிறு பாலம் அமைக்க வேண்டும்.

க.அம்பிகாபதி (அதிமுக): சேமக்கோட்டை ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

விஜயதேவி தேவராசு (தவாக): சிறுவத்தூா் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து தண்ணீா் பிரச்னையைப் போக்க வேண்டும். ஏரிப்பாளையம் கிராம மக்களின் தனி ஊராட்சி கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

என்.சக்தி (பிடிஓ): பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட செம்மேடு, போ்பெரியான்குப்பம், கீழக்குப்பம், கீழ்மாம்பட்டு, அரசடிகுப்பம் ஆகிய 5 ஊராட்சிகளில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் நடைபெற்றால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com