விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எள் வரத்து அதிகரிப்பு
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை குவித்து வைக்கப்பட்டுள்ள எள்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் எள் மூட்டைகளின் வரத்து அதிகரித்து வருகிறது.
விருத்தாசலத்தில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, பிற மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் தங்களது விளைப் பொருள்களை கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்வது வழக்கம்.
தற்போது, எள் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், விற்பனைக் கூடத்துக்கு எள் மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. புதன்கிழமை ஒருநாளில் மட்டும் 650 எள் மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. 80 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.10,929-க்கும், குறைந்தபட்சமாக ரூ.9,269-க்கும் விற்பனையானது.
இதேபோல, குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 56 எள் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது. அதிகபட்ச விலையாக ரூ.11,470, குறைந்தபட்சமாக ரூ.8,409-க்கு விற்பனையானது. பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 12 எள் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது, அதிகபட்ச விலையாக ரூ.10,453, குறைந்தபட்ச விலையாக ரூ.10,151-க்கு விற்பனையானது.
இதேபோல, விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 300 மூட்டை மணிலா புதன்கிழமை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அதிகபட்ச விலையாக மூட்டை ரூ.8,069-க்கு விற்பனையானது. பிபிடி ரக நெல் அதிக பட்சமாக மூட்டை ரூ.2,410-க்கு விற்பனை செய்யப்பட்டது. 100 கிலோ எடை கொண்ட உளுந்து 75 மூட்டை வந்திருந்த நிலையில், அதிகபட்சமாக மூட்டை ரூ.9,689-க்கு விற்பனை செய்யப்பட்டது.

