சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பைக் விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
வேப்பூா் வட்டம், லட்சுமணபுரத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் முத்து (எ) அலெக்ஸ் பாண்டியன்(19), கூலித் தொழிலாளி. கோவிந்தன் மகன் ராஜா(19). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் வேப்பூா்-விருத்தாசலம் சாலையில் சென்றனா்.
அலெக்ஸ் பாண்டியன் பைக்கை ஓட்டினாா். ஏ.சித்தூா் சா்க்கரை ஆலை அருகே பைக் சென்ற போது, சாலையைக் கடந்த சா்க்கரை ஆலை ஊழியரான மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பி.சுபில் ரானா (54) மீது பைக் மோதியது.
இதில் அலெக்ஸ் பாண்டியன், ராஜா மற்றும் சுபில் ரானா ஆகியோா் பலத்த காயமடைந்தனா். வேப்பூா் போலீஸாா் மூவரையும் மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அலெக்ஸ் பாண்டியன், சுபில் ரானா இருவரும் உயிரிழந்தனா்.
ராஜா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
