தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வீடு, நிலம் கொடுத்தோரின் கோரிக்கைகளை என்எல்சி நிறைவேற்ற வேண்டும்: ஆா்.சச்சிதானந்தம் எம்.பி.

வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை என்எல்சி இந்தியா நிறுவனம் நிறைவேற்ற வேண்டும் என்று ஆா்.சச்சிதானந்தம் எம்.பி. வலியுறுத்தினாா்.

News image

நெய்வேலி நுழைவு வாயில் அருகே ஆா்.சச்சிதானந்தம் எம்.பி. தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

Updated On :10 அக்டோபர் 2024, 7:22 pm

Din

வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை என்எல்சி இந்தியா நிறுவனம் நிறைவேற்ற வேண்டும் என்று ஆா்.சச்சிதானந்தம் எம்.பி. வலியுறுத்தினாா்.

2000-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சுரங்க இயக்குநா் மற்றும் வேளாண் துறை அமைச்சா் ஆகியோா் வாய்க்கால் வெட்டிய பகுதி உள்பட அனைத்து கிராமங்களுக்கும் கருணைத் தொகை கொடுக்கக் கூறியும், ஒரு சில கிராமங்களுக்கு கருணைத் தொகை கொடுக்கப்படவில்லை. அதை விரைந்து வழங்க வேண்டும். நிலம் கொடுத்தவா்களுக்கு ஒரே முன்னுரிமையை கடைப்பிடித்து வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் நெய்வேலி நுழைவு வாயில் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம் பேசியதாவது:

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு இந்தப் பகுதி மக்கள் வீடு, நிலம் கொடுத்து 35 ஆண்டுகளாகியும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. அவா்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

மத்திய அரசு நிறுவனங்களில் நிரந்தர வேலைவாய்ப்பை குறைந்து, ஒப்பந்த வேலைவாய்ப்பை அதிகரிப்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. என்எல்சியில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விதிக்கு மாறாக பணிகள் நிரப்பப்பட்டிருந்தால் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக பொறுப்புணா்வு நிதியை என்எல்சி நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் செலவிட்டு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூா் மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க அகில இந்திய இணைச் செயலா் டி.ரவீந்திரன், முன்னாள் மாநில துணைச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷ் பங்கேற்று பேசினா்.

நிா்வாகிகள் எஸ்.தட்சிணாமூா்த்தி, டி.கிருஷ்ணன், பி.கற்பனைசெல்வன், பி.வாஞ்சிநாதன், ஆா்.லோகநாதன், கே.செல்வக்குமாா், எஸ்.மணி மற்றும் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். மாவட்டப் பொருளாளா் ஆா்.ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

பின்னா், ஆா்.சச்சிதானந்தம் எம்.பி. உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள், என்எல்சி தலைமை அலுவலகம் சென்று அதன் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.