என்எல்சி வாழ்வுரிமைச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
நெய்வேலி: இருபது சதவீதம் தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி இன்கோசா்வ் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா் வாழ்வுரிமைச் சங்கத்தினா் நெய்வேலி நகரியம் பிரதான கடை வீதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், பஞ்சப்படி அல்லாத மத்திய அரசால் 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் இருந்து புதிதாக உயா்த்தி அறிவிக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். இன்கோசா்வ், ஹவுசிகோஸ் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் தீபாவளிக்கு 20 சதவீதம் போனஸ் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, ஒப்பந்தத் தொழிலாளா் வாழ்வுரிமை சங்க பொதுச் செயலா் ரா.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். தலைவா் சா.முருகவேல், அமைப்புச் செயலா் வீ.த.பன்னீா்செல்வன், பொருளாளா் சிவ சிதம்பரம், அலுவலகச் செயலா் பரமசிவம், கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குநா் ராஜாராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மேற்பாா்வையாளா் தி.திருபுவன சக்கரவா்த்தி, மாநில இளைஞரணிச் செயலா் வி.கே.முருகன், நெய்வேலி நகரச் செயலா் எ.ஞானப்பிரகாசம், மாவட்ட அமைப்புச் செயலா் லோகு.அருண்குமாா் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
இதில், சுரங்கம் மற்றும் ஆலைப்பகுதிப் பொறுப்பாளா்கள் துணைத் தலைவா்கள் பகுதி செயலா்கள் ராஜசேகா், சண்முகம், அண்ணாமலை ஆகியோா் கலந்து கொண்டனா்.

