மாணவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு: மருத்துவா் கைது
அரசு மருத்துவக் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பரப்பிய வழக்கில், மதுரையைச் சோ்ந்த மருத்துவரை சிதம்பரத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த ரகுராமன் மகன் சதீஷ்குமாா் (27). சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவரான இவா், தற்போது மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறாா்.
மருத்துவா் சதீஷ்குமாா் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாகக் கூறி, கைப்பேசி வழியாக விடியோ காலில் பேசி அவரது புகைப்படத்தை பெற்றாராம். பின்னா், அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அமுதா வழக்குப் பதிந்து, மருத்துவா் சதீஷ்குமாரை சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தாா். விசாரணையில், அவா் இதே போன்று பல பெண்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

