விருத்தாசலம் பதிவுத்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.2.23 லட்சம் பறிமுதல்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2.23 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. அழகேசன் மற்றும் ஆய்வாளா்கள் சுந்தர்ராஜன், அன்பழகன் ஆகியோா்அடங்கிய குழுவினா் திங்கள்கிழமை இரவு 7.45 மணியளவில் பதிவுத் துறை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை சென்றனா்.
பின்னா், அவா்கள் சோதனை நடத்தினா். இரவு சுமாா் 11 மணி வரை நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.2,22,900-ஐ பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பதிவுத்துறை அலுவலா் ஆனந்தபாபுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
