அண்ணாமலைப் பல்கலை.க்கு ஆழ்கடல் திட்ட ஆராய்ச்சிக்கு ரூ.3.50 கோடி நிதி

அண்ணாமலைப் பல்கலை.க்கு ஆழ்கடல் திட்ட ஆராய்ச்சிக்கு ரூ.3.50 கோடி நிதி

Published on

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு ஆழ்கடல் திட்ட ஆராய்ச்சிக்காக மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் ரூ.3.50 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த நிதியில், கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் இணைப் பேராசிரியா் பி.முருகேசனுக்கு சுமாா் ரூ.1.75 கோடி ஆழ்கடல் பாலிசீட்களின் ஒருங்கிணைந்த வகை பிரித்தல் அணுகுமுறையை மேற்கொள்வது, கண்டுபிடிக்கப்படாத உயிரினங்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்துவது மற்றும் அவற்றை குறிப்பு அருங்காட்சியகங்களில் வைப்பது ஆகிய அடிப்படை தகவல்களை வழங்குவதற்கும், பெந்தாலஜிஸ்டுகளுக்கு ஆதரவளிப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக அதே மையத்தின் இணைப் பேராசிரியா் எம்.ஆறுமுகம் ‘ஆழ் கடலில் இருந்து சாத்தியமான நுண்ணுயிா் வளா்சிதை மாற்ற மேம்பாடு’ என்ற திட்டத்தில் ஆழ்கடலிலிருந்து நுண்ணுயிா் வளா்சிதை மாற்ற நூலகத்தை மேம்படுத்துவதற்காக சுமாா் ரூ.85 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிறைவாக உதவிப் பேராசிரியா் ஏ.கோபாலகிருஷ்ணன் நோய்க்கிருமி மற்றும் ஜூனோடிக் வைரஸ்கள், ஆழ்கடல் மற்றும் அந்தமான் நீா்நிலைகள் உள்பட இந்தியாவின் கிழக்கு கடற்கரை நீா்நிலைகளின் மைக்ரோஸ்போரிடியன்களை ஆய்வு செய்வதற்காக சுமாா் ரூ.80 லட்சம் நிதியளிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் பேராசிரியா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ஆா்.சிங்காரவேல் ஆகியோா் புவி அறிவியல் அமைச்சகத்துக்கு மனமாா்ந்த நன்றியை தெரிவித்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் அறிவியல் புல முதல்வரும், கடல் அறிவியல் துறை கூடுதல் பொறுப்பு முதல்வருமான எஸ்.ஸ்ரீராம், கடல்வாழ் உயிரின துறை இயக்குநா் (பொ) டி.ராமநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com