கிள்ளையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை
சிதம்பரம் - கிள்ளை சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவா் கிள்ளை ரவிந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தொல்.திருமாவளவன் எம்.பி. மற்றும் மத்திய ரயில்வே துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை ரயில் நிலையம் ஆங்கிலேயா் காலம் முதல் இயங்கி வருகிறது. இதில், கிள்ளை - சிதம்பரம் இடையே உள்ள ரயில்வே கேட்டுக்கு கிழக்கே கிள்ளை, பரங்கிப்பேட்டை உள்பட இரண்டு பேரூராட்சிகளும், 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும், கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் மற்றும் பிச்சாவரம் படகு குழாம் உள்ளிட்டவை உள்ளன.
இந்த ரயில்வே கேட்டை கடந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா். ரயில் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், இந்த கேட் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை மூடப்படுகிறது.
இதனால், மாணவா்கள், அரசு ஊழியா்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, கிள்ளை ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

